# அறம் சிறுகதைத் தொகுதி [‘Aram’ Stories]
குறும்படைப்பு: சோற்றுக்கணக்கு - சிறுகதை [Sotrukanakku]
கெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக் காலத்தில் அவரது சாப்பாட்டுக்கடை இருந்தது. அறுபது எழுபதுகளில் அங்கே சாப்பிடாதவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்தால் அவர்கள் சைவச் சாப்பாட்டுக்காரர்களாக இருப்பார்கள்.எழுபத்திஎட்டில் கெத்தேல் சாகிப் சாவது வரை கடை நடந்தது. இப்போதும் மகன் பல இடங்களில் கடையை நடத்துகிறார். அதே இடத்தில் அவரது உறவினர்கள் கடை நடத்துகிறார்கள். இப்போதும் அங்கே மீன்கறிக்கும் கோழிக்குழம்புக்கும் அதே சுவைதான். இப்போது முபாரக் ஓட்டல் என்று பெயர். இன்றும் கூட்டம்கூட்டமாக வந்து காத்துக்கிடந்து சாப்பிடுகிறார்கள்.